திரிசா கிருஷ்ணன்
கடந்த வருடம் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த ‘ஜானு’ என்கிற கதாபாத்திரம் த்ரிஷாவுக்கு புதிய முகவரியை வழங்கியது.
சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக வெளியான செய்திகளை உடைத்து எரிந்தார் த்ரிஷா. மீண்டும் கிடைத்த இந்த பிரமாண்ட வரவேற்பால் அவருக்கு புதிய உத்வேகம் பிறந்தது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த இந்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்த த்ரிஷா பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸுகளை வாங்கி குவித்தார்.
இந்நிலையில் த்ரிஷா புதியதாக மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் கேப்ரியோலெட் சி300 காரை சொந்தமாக வாங்கியுள்ள விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்த காரை அவருக்கு நேரடியாக ஷோரூம் அதிகாரி டெலிவிரி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.
அசத்தலான சிறப்பம்சங்களுடன் மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கேப்ரியோலட் சி-300 கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸின் சி-கிளாஸ் வரிசையில் வரும் மிட்-பெட்ரோல் வேரியன்டாகும்.
1991சிசி 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த மாடல் 258 பிஎச்பி பவர் மற்றும் 370 என்.எம் டார்க் திறனை வழங்கும். துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 6.2 விநாடிகளில் எட்டிப்பிடித்துவிடும் இந்த கார், மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும்.
அராய் அமைப்பு மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கேப்ரியோலட் சி-300 கார் ஒரு லிட்டருக்கு 9.6 கி.மீ மைலேஜ் வழங்கும் என சான்று அளித்துள்ளது. இரண்டு கதவுகள் மட்டுமே இந்த காரில் இடம்பெற்றுள்ளன. அதன்படி அதிகப்பட்சமாக நான்கு பேர் வரை காரில் பயணம் செய்யலாம்.
இதனுடைய பூட் வசதி 285 லிட்டர்கள், காரின் எரிபொருள் கொள்திறன் 66 லிட்டர். மேலும் ஏபிஎஸ் பிரேக் அசிஸ்ட், உராய்வு கட்டுப்பாட்டு அமைப்பு, ஹில் அசிஸ்ட், இபிடி, ஏர்பேகுகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
காரின் இரு புறங்களிலும் டிஸ்க் பிரேக் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மழை வந்தால் உடனே காரின் வைப்பர்கள் தானாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 17 அங்குல அலாய் சக்கரங்கள், எல்.இ.டி திறனில் ஒளிரும் முகப்பு விளக்குகள், பின்பக்க விளக்குகள், உயர் ரக லெதரால் வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுுள்ளது.
Comments
Post a Comment